சிட்டுக்குருவியும் காதலும் - Sparrow and Love

        "சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே"
இப்பாடலை கேட்காத ஆளே இல்லை எனலாம். சிவாஜி கணேசன், சரோஜாதேவி நடித்த புதிய பறவை படத்தில் இடம்பெற்ற அருமையான பாடல். இப்பாடலை பற்றி பேசக்காரணம்,

      இன்று உலக சிட்டுக்குருவிகள் தினமாம். சிட்டுக்குருவியை இன்று இணையத்தில் மட்டும் காண்கிற அவலம். என்னதான் ரஹ்மானின் "மழைக்குருவி" பாடல் நெஞ்சை உறங்க வைத்தாலும் சிறுவயதில் அந்த சிட்டுக்குருவி போட்ட "கீச் கீச்" என்ற தேனிசைச் சத்தத்திற்கு இணையாகவில்லை. என்னே அழகு!

      இணையமில்லாத அந்த பள்ளிப்பருவ பொழுது பறவைகளுடனும் மற்ற உயிரினங்களுடனும் இன்பமாக கழிந்தது. புரியாத அந்த வயதில் சிறிய உண்டிகோலை கொண்டு சிட்டுக்குருவியை அடிக்க துரத்தியது அருமையான நினைவு. ஆனால் இதுவரை அடிக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.

       கையடக்க உடல், சாம்பல் நிற முதுகு, கருமை நிற கழுத்து, சிறிய கண்கள், சிறிய அலகு, சற்று நீண்ட வால் இவைதாம் அவற்றின் அடையாளங்கள். காலையில் சிட்டுக்குருவியின் சத்தம் கேட்டு விழிக்காத நாளில்லை எனலாம். அந்த அளவிற்கு என்னுடைய வீடு குருவிக்கு கூடாகிப் போனது. கட்டிடக்கலை பொறியியல் படிக்காமலே என்ன நேர்த்தியான கூடினை வடிவமைக்கின்றன. அந்த சிறிய வாலை ஆட்டி ஆட்டி அங்குமிங்கும் பறந்து கொண்டிருப்பதை கண்டால் நேரம் போவது தெரியாது. இந்நொடியில் கூகுள் புகைப்படத்தில் சிட்டுக்குருவியை பார்க்கமுடியும் யூடியூப் காணொளியில் அதன் அசைவுகளை ரசிக்க முடியும் என்றாலும் பழைய நினைவுகள் போல இவை இருப்பதில்லை. இந்த கருத்துரு எழுதும் வேளையில் கண்முன்னே அந்த குருவி தோன்றாதா என மனம் எண்ணி வெதும்புகிறது. அதன் குரல் காதில் கீச்சிடுகிறது.

           அலைபேசி தேவை அதிகரித்த இந்நாளில் அலைபேசியிலிருந்து வெளிப்படும் அலைகள் சிட்டுக்குருவி போன்ற சிறிய பறவைகளை அழிப்பதாய் அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து 2.0 படமும் வந்துள்ளது. கோடை காலம் நெருங்கும் இவ்வேளையில் வெயிலின் தாகம் அதிகமாயுள்ளது. தண்ணீரை தேடி பறவைகள் அலையக்கூடிய நிலையில் மனிதர்களாகிய நாம் ஒரு பாத்திர நீரை மாடியில் வைப்பது அழியும் நிலையிலுள்ள சிட்டுக்குருவிக்கு நாம் செய்யும் கைம்மாறாக இருக்கும்.

பறவைகளை காப்போம்!!

Comments

Popular posts from this blog

தாய்லாந்தின் சிறந்த சுற்றுலா தளங்கள் - Best Tourist Place in Thailand

குப்பை

தொடரும் மருத்துவத்துறையின் அவலம் - Continues neglect of the Medical Department