Posts

Showing posts from 2021

குப்பை

“ப்ப்பா…, குப்பை…!” அடித்தொண்டையிலிருந்து கிளம்பிய குரல், இரண்டு பக்கமும் அப்பார்ட்மென்ட் கட்டடங்களும், மாடி வீடுகளும் நெருக்கியடித்து நின்றிருந்த அந்த வீதியின் தொடக்கத்திலிருந்து கேட்டது. குரலின் தொடர்ச்சியாக வீதிக்குள் திரும்பி கொண்டே, நுழைந்தது இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்ட, அடர்த்தியான பச்சை நிற குப்பை வண்டி. வண்டியின் உள்ளே இரண்டு பெரிய பிளாஸ்டிக் ட்ரம்கள். பச்சை மற்றும் சிவப்பு வண்ணங்களில், வெயிலில் வெளுத்துப் போய் கிட்டத்தட்ட பச்சையாகவும், சிவப்பாகவும் இருந்தன. வண்டியின் ஒரப்பகுதிகள், ட்ரம்களில் மாநகராட்சியின் பெயர், வெள்ளை பெயிண்ட்டால் ஸ்பிரே செய்யப்பட்டிருந்தது. வண்டியின் நீளமான இரும்பு கைப்பிடியின் வெள்ளி வண்ணங்கள் உதிர்ந்து போய் இருந்தது. கைப்பிடியின் இரு முனைகளிலும் கெட்டியான சாக்குப்பைகள் கட்டி தொங்கவிடப்பட்டு உப்பியிருந்தது. அதில் இரும்புக்கம்பிகள், உடைந்த மரச்சட்டங்கள், பிளாஸ்டிக் பட்டைகள் வெளியே ஆர்வமாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன. ட்ரம்களில் அதுவரை சேகரித்த குப்பைகளின் கலவை கிடக்க, அவற்றின் மேல் ஈக்களின் ரீங்காரம். வண்டியை தாண்டி நடந்த இரண்டு பெண்கள் மூக்கில் விரல...